Thursday, November 11, 2010

தமிழ்ல பேசுங்க

தமிழர்களாகிய நம்மிடம் உள்ள இரண்டு குறைகள்
      1      நம் பெருமைகளை நாமே அறியாதது
      2      நாம் பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது

முதல் குறையை பார்ப்போம் .
(முந்தைய பதிவில் இது போன்ற விஷயத்தை காட்டான் தொகுத்து இருந்தார் )
     உலக செம்மொழிகளில் சமஸ்கிருதம் ஹீப்ரு கிரேக்கம் லத்தின் சைனீஸ் ஆகிய மொழிகளுன் இணைந்த தமிழ் மொழி சைனீஸ்க்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது.  ஆனால் தமிழர்களாகிய நாம் தமிழ்மொழிக்கு செய்யும் கைம்மாறு என்ன? "hi டா saturday evening 6  o clock meet பண்ணலாமா" இந்த வாக்கியத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கையை நீங்களே பார்துக்கொல்லாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் அப்படித்தான்
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்  தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்
இன்று என் குழந்தைக்கு தமிழ் சரியாய் வராது என சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறாள்.  தமிழர்களாகிய நாம் ஹிந்தி பேசும் பொழுதுகூட பங்கா(fan ) பிஜிலி (Current ) என பேசுகிறோம். ஆனால் மின்விசிறி, மிதிவண்டி என பேசும் சூழல் நமக்கு இல்லை.

மற்ற எந்த மொழிக்கும் இல்லாத வளர்தன்மை தமிழ் மொழிக்கு இருக்கிறது.  உதாரணத்துக்கு கம்யுட்டர் பயண்பாட்டிற்க்க வந்தவுடன் அதற்க்கு நாம் கணினி என்று நாம் பெயர் வைத்து விட்டோம்.  ஆனால் மற்ற மொழிகளில் தமிழ் மொழி அளவிற்க்கு சாத்தியமில்லை.  கணினிகளில் பயன்படுத்தப்படும் யுனிகோட் எழுத்துகளும் தமிழ்மொழியில் சாத்தியமே. (யுனிகோட் என்றால் என்ன என்பதைப் பற்றி தனி பதிவு எழுதுகிறேன்).  சென்னை பல்கலைகழகம் மற்ற அறிவியல் சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை பயன்பாட்டிற்கு  கொண்டுவறுவதற்க்கான பணியை செய்து வருகிறது.  இதை தவிற இனையத்தில் பல்வேறு தமிழ் அகராதிகளும் புழக்கத்தில் இருக்கிறது.
     உதாரணாமாக நன்பர் வெங்கட்ராமனின் சந்தேகம். ஆம்லெட்டிற்க்கு தமிழில் முட்டை ஊத்தப்பம். சரியாகவும் எளிமையானதாகவும் உள்ளதல்லவா.
சரி பெருமைகளை மட்டுமே பெசிக்கொண்டிருந்தால் எப்படி.  அடுத்து என்ன செய்ய?
     முடிந்தவரை பேச்சுவழக்கத்தில் பிற மொழிச் சொற்களை தவிர்த்து தமிழில் பேசுங்கள்
     பொது இடங்களில் நல்ல தமிழில் பேசுவதை அவமானமாகவோ தரக்குறைவாகவே நினைத்துக் கொள்ளாதீர்கள்
     பிற மொழிகளில் சாத்தியமான அனைத்தும் தமிழ் மொழியிலும் சாத்தியம் என்பது சத்தியம்
     பிழையின்றி தமிழ் பேச எழுத கற்றுக் கொள்ளுங்கள்
     நமது பிள்ளைகள் நன்பர்களை நல்ல தமிழில் எழுத பேச ஊக்கப் படுத்துங்கள்.
     வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தமிழை கற்றுக் கொடுங்கள்.
உலகில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்கள் அணைவரும் அவர்கள் தாய் மொழியில் கல்வி கற்றவர்கள் என்ற உண்மையை உணருங்கள்.

தமிழ் வளர்க்க அல்லது அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆலோசனைகளை இந்த பகுதியில் எழுதுங்கள்.

பதிவாளர்
"வெண்னை வெட்டி" சிப்பாய்
(பிழைகளை சுட்டி காட்டுங்கள்
முடிந்தால் எழுத்துக்களை திருத்திக்கொள்கிறேன்
இல்லையேல் எழுதுவதை நிருத்திக்கொள்கிறேன்.)

Saturday, November 6, 2010

தமிழ் வளர்த்த சான்றோர்கள்

தமிழ் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பெரியோர்கள் பலர். பல்வேறு துறைகளில் தமிழ் மொழி முன்னேற பாடு பட்ட இப்பெரியோர்களைப்   பற்றி "தமிழ் தாயகத்தின்" நண்பர்கள் தெரிந்துகொள்ள இணையதளத்திலிருந்து தகவல் தொகுப்புகளை தர விரும்புகின்றேன்.

முதலில் பாரதியார் பற்றிய தொகுப்பு இது

  
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது


வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரைகாசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி


தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

    * குயில் பாட்டு
    * கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன்                                                  மீது   பாடிய பாடல்களின்
                                         தொகுப்பாகும்.
   * பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.


பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.


தேசியக் கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

பாரதியார் நினவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு  இல்லமாகவும்,சென்னை  திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.(நன்றி:விக்கிபீடியா)



தொகுப்பு
 காட்டான்

தமிழனின் வரலாறு

 
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். . தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.




இந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்.ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை ...

இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு  ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய  காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம்  ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது

 

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.
1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.


 

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்...
 
இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள்  பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.


 

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.


 

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.


 

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.


ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.


 

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..

”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்”
 
எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.

இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.


இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.


 

இதைச் உலகறியச்  செய்யவேண்டியது மத்திய அரசு,
செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

இவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ?,

# 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்தி தீர்மானம் போடுவார்கள்
#மாநாடு வெற்றிகரமாக நடந்ததிற்காக தனக்குத்தானே பாராட்டு விழா நடத்துவார்கள்..
#தீர்மானத்தை எப்படி நிறைவேற்றுவது என்று அமைச்சரவை கூட்டம் நடத்துவார்கள்
#கூட்டத்தின் முடிவில் இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது என்று தீர்மானம் போடுவார்கள்.
#இதைப் பாராட்டி ஓணாண்டி கவிஞர்கள் கவிதை என்ற பேரில் கவியரங்கம் ஒன்றில் உளருவார்கள்.


இந்த கொடுமையை விட அது இடுகாடாகவே இருந்து விட்டு போகட்டும்.
தொகுப்பாளர்
காட்டான்